துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், நாங்கள் எச்சரித்தப்படியே துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்க சுகாதாரத்துறை முயற்சிக்கிறது என குறிப்பிட்ட அவர், ”அரசியலமைப்பு சட்டத்தின்படி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார்.