
கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி இது தான் என்றும் இதன் தாக்கம் 16 ஆம் தேதி காலை வரை இருக்கும் என்று கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கினாலும் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை எதுவும் பெய்யாமல் போக்கு காட்டி வந்தது. இதனால், பருவமழை எப்போது சூடுபிடிக்கும் என மக்கள் எதிர்பார்க்க தொடங்கினர். இந்த நிலையில், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பரவலாக மழை பெய்ய ஆரம்பித்தது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளால் தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் மழை பல இடங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். முன்னதாக தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழைக்கு வாய்ப்பு: விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 16 ஆம் தேதி காலை வரை: இந்த நிலையில், தமிழகத்தில் மழை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது:- தென்மேற்கு வங்க கடலில் டெல்டா பகுதியில் மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதை பார்க்கிறோம். வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி போல இதை கடலோர மாவட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். 16 ஆம் தேதி காலை வரை இதன் தாக்கம் இருக்கும். அதன்பிறகு மேலடுக்கு சுழற்சி இழுத்துக் கொண்டு மேலே சென்றுவிடும். எனவே தாக்கம் 15 ஆம் தேதி மாலை வரைக்குமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.