சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ‛‛ நீதித்துறையில் ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சந்திரசூட் கூறினார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில், தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது, 2002ல், அ.தி.மு.க., ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வேலுார் முதன்மை மாவட்ட நீதிமன்றம், பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்து சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தார். அவசரகோலத்தில் விசாரணை நடத்தி, வேக வேகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டு, பொன்முடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு அவர் பரிந்துரைத்தார்.

மேல்முறையீடு

சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க, சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று(நவ.,06) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‛‛மீண்டும் விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஐகோர்ட் விசாரிக்க தடையில்லை எனக் கூறிய இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர் நீதித்துறையில் ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.