தென்காசியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்துக்கு சென்றார்.

அங்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவி பிரேமாவுக்கு கொடுத்தவாக்குறுதியின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாணவியின் குடும்பத்துக்கு வீடுகட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது மாணவி பிரேமாவின் தாயார் ரா.முத்துலட்சுமி,தந்தை சு.ராமசாமி ஆகியோரிடம் பேசினார். மேலும் மாணவி பிரேமாவிடம், புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த வீட்டுக்கு அருகில் இருந்தபடியே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்போன் வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது, ‘உங்கள் வீடு கட்டி கொண்டிருக்கும் இடத்தில் இருந்துதான் பேசுகிறேன். இன்னும் 2 மாதங் களில் வீடு கட்டி முடிக்கப்படும்’ என்றார். அதற்கு மாணவி பிரேமா முதல்-அமைச்சருக்கு, நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார். இதேபோல் மாணவி யின் பெற்றோரும் முதல்-அமைச்சருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

அங்கிருந்து தென்காசி செல்லும் வழியில் முதல்-அமைச்சரை வரவேற்ப தற்காக கீழச்சுரண்டை கிராமத்தில் மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றினர். இதைப்பார்த்ததும் தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின், அவர்களுடன் சிலம்பம் சுற்றி அசத்தினார். இதைப்பார்த்த மாணவ- மாணவிகள் கரகோஷம் எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.