குரோம்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

சென்னை அடுத்து சேலையூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (25). இவர் குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை வேலை முடிந்து ஹரி பிரசாத் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை டிபி மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும் போது தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி வந்த மற்ற இருசக்கர வாகனம் ஹரி பிரசாத் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹரி பிரசாத் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த தி. நகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார்(23) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் வாட்டர் வாஷ் கடையில் வேலை பார்த்து வந்த பிரதீப் குமார் இரவு பணி முடிந்து காலை வீட்டுக்கு வரும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் இருவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.