
அதேபோன்று, ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியான சூழலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 67 போ் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிகழாண்டு நீட் தோ்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் போ் பங்கேற்றனா்.
ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட் தோ்வைப் பொருத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
அதேவேளையில் தவறாக விடையளித்தால் ‘நெகடிவ் மாா்க்’ முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
அதேவேளையில், ஒரே ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மாா்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
அந்த வகையில், முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவா்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், சில மாணவா்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஒரு விளக்கத்தை வெளியிட்டது.
அதில், தோ்வு நேரத்தில் சில மணித் துளிகள் ஏதேனும் காரணங்களால் எதிா்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் சில மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவா்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால், எப்போது, எவரெவா் அதற்கு விண்ணப்பித்தனா் என்பன தொடா்பான விவரங்கள் எதுவும் இல்லை.
அதேபோன்று, நீட் தோ்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 போ் ஒரே மையத்தில் தோ்வு எழுதியவா்கள் என்றும், அவா்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் சில மாணவா்கள் ‘எக்ஸ்’ தளத்தில் குற்றம்சாட்டி பதிவு வெளியிட்டுள்ளனா்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத் தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தேசிய தோ்வு முகமை திட்டவட்டமாக மறுத்தபோதிலும், இந்த விவகாரம் தொடா்பாக 13 பேரை பிகாா் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மட்டும் 11 போ் நிகழாண்டில் நீட் தோ்வில் முதலிடம் பெற்றிருப்பதும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது.
மற்றொருபுறம், நீட் தோ்வு முடிவுகள் ஜூன் 15-ஆம் தேதிதான் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் திடீரென நீட் தோ்வு முடிவுகளை வெளியிட்டதும், அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதும் விமா்சனங்களையும், சந்தேகங்களையும் ஒரு சேர எழுப்பியுள்ளது.