சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த சங்கரய்யா, தனது பொதுவாழ்வில் மிகவும் நேர்மையுடனும், சமூக உணர்வுடனும் செயல்பட்டு, மக்கள் நலப்பணியாற்றியதை தமிழக மக்கள் யாரும் மறக்க முடியாது என்றும் காதர் மொகிதீன் கூறியுள்ளார். அவரது சேவைகளை பாராட்டி, தமிழக அரசு அவருக்கு தலைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சங்கரய்யா, இஸ்லாமிய சமுதாய மக்களுடன் நல்ல தோழமை உணர்வுடன் பழகியதை எப்போதும் மறக்க முடியாது.
தியாகி சங்கரய்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவருக்கும் தனது இரங்கலையும், ஆறுதல்களையும் கூறிக் கொள்வதாகவும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.