
ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்கள் புது ஒளிவு பெறும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தகவல்
ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி அதில் உறுப்பினர்களை நியமித்து உள்ளது.
இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு முன்னால் உறுப்பினர் ரவிச்சந்திரன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் கூறுகையில் :-
திரிசூலம், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு, பாலூர் போன்ற ரயில் நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ரயில் நிலையங்களாக உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் நிலையங்கள் எல்லாம் மேம்படுத்துவதற்கு பயணிகளுடைய வசதிகளை நவீனப்படுத்துவதற்கான முயற்சியை இன்று மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னெடுத்திருக்கிறார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் ரயில் நிலையங்களில் தூய்மைக்கான விழிப்புணர்வை பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
என்னதான் அரசும், ரயில்வே அமைச்சகமும் தூய்மை பணியை முன்னெடுத்தாலும், தூய்மை என்பது நமது உள்ளங்களில் இருந்து வெளிவர வேண்டும், அதற்கான முன்னெடுப்புகளை எடுப்போம்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் சென்று சேராமல் உள்ளது.
அதனை ரயில் நிலையங்கள் மூலம் கொண்டு செல்லலாம்.
பிரதமர் மோடி அனைத்து ரயில் நிலையங்களையும் அமிர்த் பாரத் ரயில்வே திட்டத்தின் மூலம் மேம்படுத்துகிறார்.
பயணிகளுக்கு விமான நிலையங்களில் இருப்பது போல எக்சிலேட்டர் போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
குறிப்பாக பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாயை வரைவு திட்டங்களுக்காக ஏற்கனவே ஒதுக்கி உள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கு அந்த ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தி தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச விமான நிலைய தரத்திலே ஏற்படுத்த வேண்டும்.
ரயில்வே ஆலோசனைக் குழு தங்களுடைய கடமையை, பொறுப்பை உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து மக்களுடைய ஆலோசனையை பெற்று ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கு என்னென்ன முன்னெடுப்புகள் எடுக்க வேண்டுமோ அதனை அறிந்து பணியாற்ற வேண்டும்.
ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்களை புது பொலிவுலுடன் மக்கள் பார்க்கலாம்.
அதற்கான முன்னெடுப்புகளை இந்த ரயில் நிலைய மேம்பாட்டு ஆலோசனை குழு கண்டிப்பாக செய்யும் என தெரிவித்தார்.