தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பெரும்பாலானோர் அதிவேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவில் சிறுவர்கள் சிலர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அங்கிருந்த சிறுமி மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடத்தில் வேகத்தடைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் அதிக வேகத்தில் செல்வதால் இதுபோன்று விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.