தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).
இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உதயாவை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்ட உதயா ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் ஓடியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த உதயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் உதயாவை சரமாரியாக வெட்டி கொலை செய்த மூன்று நபர்களும் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பின்னர் அவர்கள் சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களிடம் சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நரேஷ் (24), மப்பேடு, புத்தூர் விரிவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (19), சாந்தகுமார் (19) எனவும் இதில் கிருஷ்ணன் மற்றும் சாந்தகுமார் தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் எனவும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயா வசிக்கும் பகுதியில் நரேஷின் மாமா எலக்ட்ரீசியன் வேலை எடுத்து செய்து வந்துள்ளார். அப்போது அந்த வேலைக்காக நரேஷ் சென்ற போது சாலை நடுவே உதயா ஆட்டோவை நிறுத்தி இருந்ததாகவும் எனவே ஆட்டோவை சாலையின் ஓரம் எடுத்து நிறுத்தும்படி நரேஷ் கூறிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருவருக்கும் தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், உதயாவை கொலை செய்ய திட்டமிட்டு நரேஷின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணா மற்றும் சாந்தகுமார் உடன் சென்று சிட்லபாக்கம் பகுதியில் உதயா அவரது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.
தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் 3 நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிட்லபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.