
இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று, 16-ந் தேதியில் (ஞாயிற்றுக்கிழமை) இருந்து வடகிழக்கு பருவமழையை மீண்டும் தீவிரப்படுத்தும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
இதனால் 16, 17-ந் தேதிகளில் காவிரி டெல்டா, தென் மாவட்டங்களிலும், 17-ந் தேதி இரவில் இருந்து 19-ந் தேதி வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறி உள்ளார். 20-ந் தேதிக்கு பிறகு தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி வருகிறது.
இதில் 21-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், 25-ந் தேதிக்கு பின் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுவடையவும் வாய்ப்பு உள்ளதாகவும், இதன்படி, இம்மாத இறுதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் கூறியிருக்கிறார்.