முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (20).
இவர் கஞ்சா வைத்திருந்ததால் அவரை அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (20) என்பவர் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சந்தோஷ் இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்ததின் பேரில் அவரது தாய் சூரியகாந்தி வீட்டிற்கு சென்று செல்போனை மீட்டு தந்துள்ளார்.
இதனால் இரு தரப்பினர் இடையே முன் விரதம் ஏற்பட்டு சந்தோஷ் அவரது நண்பர்களான விக்கி (எ) விக்னேஷ் (18) மற்றும் சிலருடன் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் முடிச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் சூரியகாந்தியை வெட்டி கொலை செய்வதற்காக கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்றுள்ளனர்.
அப்போது சூரியகாந்தி அவரது சகோதரர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து கத்தியை பிடுங்கி அவர்களை திரும்ப வெட்ட முயற்சித்துள்ளனர்.
இதில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் விக்கி (எ) விக்னேஷ் மட்டும் அவர்களிடம் சிக்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரை கை, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்த அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.