வேளச்சேரியில் திருட்டை தடுத்ததால் வியாபாரியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, மேடவாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 54. இவர், வேளச்சேரி, விஜயநகர், சரவண ஸ்டோர் முன்புறம் பெல்ட், மணி பர்ஸ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரின் கடையில் இருந்து பொருட்கள் திருடு போனது.

அதிலிருந்து இரவு நேரத்தில் கடையில்லேயே தங்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடையின் முகப்பில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் கடையின் கட்டடத்தில் இருந்து பைப்புகளை திருடிக் கொண்டு வந்தனர்.

அவர்களை முனிராஜ் தட்டிக்கேட்டார். இதில், ஏற்பட்ட தகராறில் கீழே கிடந்த பீர் பாட்டிலை உடைத்து முனிராஜின் வயிற்றில் கிழித்து ஆட்டோவில் தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரின் வயிற்று பகுதியில் ஸகேன் எடுக்கப்பட்டு, நான்கு இடங்களில், 18 தையல்கள் போடப்பட்டது. இது தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் தப்பி சென்ற ஆட்டோ பதிவு எண் வாயிலாக முனிராஜை தாக்கியது சித்தாலப்பாக்கம், ஜெயலட்சமி தெருவை சேர்ந்த மணிகண்டன், 25, வள்ளவர்நகரை சேர்ந்த தினேஷ், 25, என்பதும் திருட்டை தடுக்க முயன்ற ஆத்திரத்தில் தாக்கியதும் தெரியவந்தது. பின், அவர்களை கைது செய்து, நீதிமன்ற உத்தரவு படி சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.