இளைஞர்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலையில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை திமுக அரசு தடுக்க வேண்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியில் பகுதி செயலாளர் மோகன் ஏற்பாட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சிட்லபாக்கம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, மேற்கு ஒன்றிய செயலாளர் என்.சி.கிஷ்ணன், அதிமுக கவுன்சிலர் சாந்தி புருஷோதமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பெண்கள், இளைஞர்கள் முதியவர்கள் என பலர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் கையில் போதைபொருள் தடுக்க கோரி பதாகைகளை ஏந்தியவாறு திமுக அரசுக்கு எதிரான கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.