ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜகா.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டது. ஆனாலும் ராஜ்யசபாவில் பாஜகவால் பெரும்பான்மை எம்.பி.க்களைப் பெற்று விட முடியாத பரிதாப நிலைதான் உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக வென்றது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54, காங்கிரஸ் 35, கோண்ட்வானா கட்சி 1 இடத்தில் வென்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163, காங்கிரஸ் 66, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் வென்றது.

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள். 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக 115, காங்கிரஸ் 69, பாரத் ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்டிரிய லோக் தள் 1, சுயேட்சைகள் 8 இடங்களில் வென்றன.

பாஜகவின் இந்த பெரும் வெற்றி மகிழ்ச்சியோடு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் நேற்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்து தொண்டர்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக உற்சாகமாக உரையாற்றினர்.

ஆனாலும் மத்தியில் ஆளும் பாஜகவால் இப்போதும் தனித்து ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பது துயரமானது தான். ராஜ்யசபாவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. இதில் 233 பேர் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 பேர் நியமன எம்.பிக்கள்.

ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு தேவை 123 இடங்கள். ராஜ்யசபாவில் பாஜகவுக்கு மொத்தம் 94 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.பிக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் மொத்தம் 239 எம்.பிக்கள் உள்ளனர். 6 எம்.பிக்கள் இடம் காலியாக உள்ளது. இதில் 4 இடங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் 2 இடங்கள் நியமன எம்.பிக்கள்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 59 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவிக் காலம் முடிவடைகிறது. மொத்தம் உள்ள 94 பாஜக எம்.பிக்களில் 28 பேர் பதவி காலம் முடிவடைகிறது. மொத்தம் உள்ள 30 காங்கிரஸ் எம்.பிக்களில் 10 பேர் பதவி காலம் முடிவடைகிறது. ஏப்ரல் மாதம் பதவி காலம் முடிவடையும் 59 பேரில் 12 பேர் தற்போது தேர்தல் முடிவடைந்த சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து எம்.பிக்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இந்த 12 பேரில் பாஜக 7, பிஆர் எஸ் கட்சி 3, காங்கிரஸ் 2 எம்.பிக்கள் ஆவர்.

காங்கிரஸுக்கு ஆதாயம்: தற்போதைய தேர்தல் வெற்றிகள் மூலம் பாஜக தமது 7 எம்.பிக்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடியும். காங்கிரஸ் கட்சியும் கூட மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருந்து தலா 1 எம்.பியை அதாவது 2 எம்.பி இடங்களை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பிஆர்எஸ் கட்சியின் 3 எம்.பிக்களில் 2 எம்.பி. இடங்களை கூடுதலாக காங்கிரஸ் கைப்பற்றும். ராஜஸ்தானில் இருந்து எம்.பி.யான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது.

மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி காலமும் ஏப்ரலில் முடிவடைகிறது. என்னதான் 3 மாநில தேர்தல்களில் பாஜக வென்றிருந்தாலும், ராஜ்யசபாவை பொறுத்தவரை தற்போது பதவி காலம் முடிவடையும் 7 எம்.பிக்கள் இடத்தைத் தான் தக்க வைக்க முடியும். அதற்கு மேல் பெரும்பான்மைக்கு தேவையான எம்.பிக்களை இடங்களை பாஜகவால் தனித்து பெற முடியாது.

ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு தேவை 123 இடங்கள். அதே நேரத்தில் 4 மாநில தேர்தல் முடிவுகளால் காங்கிரஸுக்குதான் கூடுதலாக 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.