
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.
▪️. இதையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்தா சுக்லா, நடவடிக்கை எடுக்க டிஎஸ்பி ஜெயஸ்ரீ, இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இவ் வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்தனர். கணேசன் இறந்தால் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலை கிடைக்கும் என இரு மகன்களும் முடிவு செய்து, பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக இவர்களது நண்பர்கள் பாலாஜி,பிரசாந்த் உதவியுள்ளனர்.அனைவரும் கைது செய்யப்பட்டனர்