
சென்னை துரைப்பாக்கத்தில் 448 கிலோ குட்கா பறிமுதல் ஊர் காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது.
சென்னை துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் நடைபெற்று வருவதாக துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
ரகசிய தகவலை தொடர்ந்து துரைப்பாக்கம் உதவி ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் கவிநாத் தலைமையிலான போலீசார் துரைப்பாக்கம் செக்ரடியேட் காலனி 5வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த 47 வயதான தாமஸ், கண்ணகி நகர் எழில் நகரை சேர்ந்த 33 வயதான ரகு, துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த 30 வயதான காவல் நிலையத்தில் ஊர் காவல் படை பணி புரியும் குணசேகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
தாமஸ் பல வருடங்களாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு வருவதும், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து பின்னர் ஹோண்டா சிட்டி காரில் ஊர்க்காவல் படையில் பணி புரியும் குணசேகரன் உதவியுடன் போலீஸ் என ஒரு அட்டையில் எழுதி காரின் முன்பக்க கண்ணாடியில் வைத்துக்கொண்டு குட்கா பொருட்களை காரில் எடுத்து வருவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் வீட்டில் இருந்த தடை செய்யப்பட்ட 448 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய ஹோண்டா சிட்டி கார், ஒரு ஆட்டோ, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ஊர்க்காவல் படை பணியில் பணி புரியும் குணசேகரன் குட்கா விற்கும் கும்பலுக்கு உதவி புரிந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.