சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி.

சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி விழாவில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் தீ மிதித்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் அந்த தீமிதி திருவிழாவில் முன்னாள் கவுன்சிலரும், தாம்பரம் மாநகர அதிமுக பொருளாளருமான மாணிக்கம், அவருடைய மனைவி தனலட்சுமியடன் தீமிதித்தார். அப்போது திடீரென மாணிக்கம், தனலட்சுமி, அன்பழகன் ஆகிய மூன்று பேர் தவறி தீக்குள் விழுந்தனர்.

இதை எடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றி நின்ற மற்ற பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், மூன்று பேரையும் அவசரமாக தீ நெருப்புத் தனலில் இருந்து மீட்டு, தாம்பரம் இந்து மிஷின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.