
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
இதன்மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனி பயணத்தில் மொத்தம் ரூ.7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் துறையின் இதயத் துடிப்பாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி.
ஜெர்மனியைப் போன்று தமிழ்நாட்டிற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2-வது பெரிய பொருளாதார மாநிலம். பார்ட்சூன் (FORTUNE) 500-ல் பி.எம்.டபிள்யூ போன்ற பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்து வருகின்றன.
ஜெர்மனி – தமிழ்நாடு ஆகிய 2 பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு வரும்போது நீங்கள் பிஸ்னஸ்கான மார்க்கெட்டாக மட்டும் பார்க்கமாட்டீங்க. உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னர்ஸாக பார்ப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்