போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில் தமிழக அரசு நிலைத் தடுமாறியுள்ளது. இந்நிலையில் நேற்று காவல்துறை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால் அவர்களின் பேட்டி துரதிருஷ்டவசமானது. திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மேலும் டிஜிபி அவர்கள் பேட்டி அளித்த விதம் திமுகவினர் எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ என் எண்ணத் தோன்றும் வகையில் திமுகவின் கருத்துக்களாகவே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது..

மேலும் காவல்துறை இயக்குநர் பேட்டியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

போதைப் பொருள் வழக்கு என்பது சட்டவிரோதம் மற்றும் சமூகவிரோத குற்றம் என்பதை காவல்துறை உணர்ந்துள்ளதா?

பிடிபட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு குறித்து அவர் பேசியது ஜாபர் சாதிக்கை காப்பாற்றவா? இல்லை இச்சம்பவம் அவ்வளவு பெரிய பிரச்சினையல்ல என்று பூசி மொழுகவா?

ஜாபரின் முந்தைய வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறுகிறார். சமூக குற்றம் புரிந்தவரை கண்காணிப்பில் வைக்க வேண்டியது காவ்லதுறை மற்றும் உளவுத்துறையின் கடமையாக இருக்கும் போது தலைமறைவாக இருக்கும் சாதிக் ஜாபர் மற்றும் அவரது தம்பியின் மறைவிடங்கள் காவல்துறைக்கு தெரியாதா?
டெல்லி போதை தடுப்பு பிரிவு பிடிக்கும் வரை, தமிழக காவல்துறை ஜாபர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளும்கட்சி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லையா?

தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக், காவல்துறைக்கு கொடுத்த பத்து சிசிடிவி கேமராவை திருப்பி கொடுத்ததாக டிஜிபி கூறுகிறார். தலைமறைவாக உள்ளவரிடம், அவரது வீடு மற்றும் அலுவலகம் மத்திய புலனாய்வு துறையால் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாரிடம் திருப்பி கொடுத்தார்கள் என்பதை தெளிவுபடுத்துவாரா?