
படம் வெளியாவதற்கு முன்னரே ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு உரிமைகளில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் சுமார் ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரூ. 120 முதல் ரூ. 130 கோடி வரை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமைகளும் ரூ. 50 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளன. ஆடியோ உரிமைகளும் சுமார் ரூ. 30 கோடிக்கு விலைபோயுள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 300 கோடி வரை வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது.
இந்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் மூலம் கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பை அடுத்து, படம் வெளியான பிறகு பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் தனி வெளியீடாகிறது. அதன் பிறகு ஐந்து நாட்கள் கழித்தே மற்றொரு பெரிய படமான ‘பராசக்தி’ ரிலீஸாகவுள்ளது. இந்த இடைவெளியில் ‘ஜனநாயகன்’ மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என்பதால், இது விஜய்யின் திரைப் பயணத்திலேயே அதிக ஓப்பனிங் கொண்ட படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.’ஜனநாயகன்’ தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதாலும், படத்தின் மீதான நம்பிக்கையாலும் இப்படம் விஜய்யின் படங்களில் அதிக வசூலை ஈட்டும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இப்படம் ரூ. 1000 கோடி வசூல் சாதனையை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால், தமிழில் முதல் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்ற வரலாற்றுப் பெருமையை ‘ஜனநாயகன்’ பெறும்.