தமிழக காவல்துறை தலைவர் அவர்களிடம் புகார்..!

சென்னை பள்ளிகரணை சாய் கணேஷ் நகரில் புயல் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, மழை நீர் வடிந்த பிறகு வழங்கப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த 7ம் தேதி பள்ளிகரணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சாந்தகுமார் ச, என்பவரை பள்ளிகரணை உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி என்பவர் எவ்வித காரணமுமின்றி யார் என கேட்டு செய்தியாளர் என கூறியும், அதிகார மமதையில் காவல்துறையினர் அதிகாரத்தை மீறி செய்தியாளரை இழுத்து சென்று சட்டையை சேதப்படுத்தி, மார்பில் கை வைத்து தள்ளி, வாயில் காயம் ஏற்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களிடம் செய்தியாளர் தரப்பில் தெரியபடுத்தியுள்ளனர். அதற்கு புகார் அளிக்க கூறியுள்ளார் ஆணையர் அவர்கள், உடனடியாக பள்ளிகரணை துணை ஆணையர் செய்தியாளரின் தொடர்பில் வந்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.

அதன் பேரில் 8ம் தேதி கானத்தூரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது, அந்த புகாரின் பேரில் கடந்த 4 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இது குறித்து துணை ஆணையரிடம் செய்தியாளர் கேட்டதற்கு விசாரிக்க சொல்வதாக கூறியுள்ளார்.

நேற்று 11ம் தேதி, பள்ளிகரணை உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி தான் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரே செய்தியாளருக்கு தொடர்பு கொண்டு உதவி ஆணையர் முருகேசன் அலுவலகம் 4 மணிக்கு வாருங்கள் ஏசி விசாரிக்க உள்ளார் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் காவல்துறைக்கே பெரிய இழுக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் எப்படி விசாரணைக்கு அழைக்க முடியும்? இது தான் தாம்பரம் மாநகர காவல் துறையின் லட்சணமா என எண்ணத் தோன்றுகிறது.

சரி என்று செய்தியாளர் காவல்துறையின் மீது வைத்த மரியாதையின் காரணமாக விசாரணைக்கு சேலையூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

ஆனால் விசாரணை என்ற பெயரில் அழைத்து உதவி ஆணையர் முருகேசன் மற்றும் பள்ளிகரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் முன்னிலையில் விசாரணை செய்யாமல் மன்னித்து, சமாதானமாக செல்லுமாறு உதவி ஆணையர் முருகேசன் கூறியுள்ளார். அதற்கு செய்தியாளர் உதவி ஆய்வாளர் தாக்கிய வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் அசோக சக்கரவர்த்தி, உதவி ஆணையர், ஆய்வாளர் முன்னிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது போய் கேஸ் போட்டு பார்த்துக்கோ என மிரட்டலாக கூறுகிறார். இதனை பார்த்துக் கொண்டு உதவி ஆணையரும், ஆய்வாளரும் அமைதியாக இருந்தது தான் அனைவரும் காக்கி சட்டை போட்டவர்கள் என புரியவைத்ததால் செய்தியாளர் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

தாம்பரம் மாநகர காவலில் பொதுமக்களின் புகார் மீது இப்படி தான் விசாரிக்கப்படுகிறதா என்பது நேரடியாக உணர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது செய்தியாளருக்கு.

இவ்வளவு நடந்தது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தெரியபடுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது உதவி ஆய்வாளரை காப்பாற்றும் செயலாக உள்ளதாக தெரிகிறது.

ஆகவே உடனடியாக பள்ளிகரணை உதவி ஆய்வாளர் அசோக சக்கரவர்த்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை பிரஸ் கிளப் கேட்டுக் கொள்கிறது.

மேலும், செய்தியாளருக்கு நடந்த நிகழ்விற்கு தமிழக காவல்துறை தலைவர் அவர்களை, விரைவில் சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

அ.செல்வராஜ்
தலைவர்

ச.விமலேஷ்வரன்
பொதுச் செயலாளர்

CHENNAI PRESS CLUB