
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா. சார்பில் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அதன்பிறகு மக்கள்தொகை குறையத் தொடங்கும்.
14 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாகவும், உள்ளது.நாட்டின் 68 சதவீதம்பேர், 15 முதல் 64 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் வயதை சேர்ந்தவர்கள்.
65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எண்ணிக்கை 7 சதவீதமாக உள்ளது. இது, மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1960-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள்தொகை 43 கோடியே 60 லட்சமாக இருந்தது. ஒரு சராசரி பெண், 6 குழந்தைகள் பெற்றுக்கொண்டார். அப்போதெல்லாம் நான்கில் ஒரு பெண் மட்டுமே கருத்தடை முறைகளை பயன்படுத்தி வந்தனர். இரண்டில் ஒருவர் மட்டுமே தொடக்கப்பள்ளி மட்டுமாவது படித்தனர்.
ஆண்டுகள் போகப்போக, கல்வி அறிவு அதிகரித்தது. பெண்கள், தங்கள் உடல்நிலை குறித்து முடிவு எடுக்கும் சுதந்திரத்தை பெற்றனர். அதன்விளைவாக, தற்போது ஒரு சராசரி பெண், 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.
மேலும், பிரசவகால மரணங்களும் குறைந்துள்ளன. தங்களின் தாயார் மற்றும் பாட்டிக்கு இருந்த உரிமைகளை விட அவர்கள் அதிக உரிமைகளையும், அதிக விருப்பத்தேர்வுகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.