கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள், குறிப்பாக வாட்ஸ்அப்பில் பரவி வரும்
“Aphelion காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்” என்ற தகவல் முழுமையாக பொய்யானது என வானிலையாளர் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்களில், Aphelion என்பது ஒரு கோள் என்றும், அது சூரியனைச் சுற்றி வருவதால் பூமி அதிக தூரம் சென்று கடும் குளிர் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரான தவறான தகவல் என வானிலையாளர் பாலசுப்பிரமணியன் விளக்குகிறார்.

Aphelion என்பது கோள் அல்ல. பூமி சூரியனைச் சுற்றி வரும் நீள்வட்டப் பாதையில், சூரியனிலிருந்து பூமி அதிக தூரத்தில் இருக்கும் ஒரு நிலைக்கான வானியல் சொல்தான் Aphelion.

இதேபோல், சூரியனுக்கு அருகில் இருக்கும் நிலை Perihelion என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறுபவையே.

பூமி–சூரியன் இடையிலான தூர வேறுபாடு மிகவும் சிறியது. 2026ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி Aphelion நிகழும் நிலையில் கூட, அதனால் காலநிலையில் எந்தக் கடும் மாற்றமும் ஏற்படாது. குறிப்பாக, இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும் என்ற கூற்று முழுமையாக தவறு.

பருவகால மாற்றங்கள் பூமி சூரியனுக்கு அருகில் அல்லது தொலைவில் இருப்பதாலல்ல;
பூமியின் சுழற்சி அச்சு 23.5 டிகிரி சாய்ந்திருப்பதே குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் போன்ற பருவங்களுக்கு காரணம்.

எனவே, Aphelion காரணமாக குளிர் அதிகரிக்கும், சளி, இருமல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்ற வாட்ஸ்அப் தகவல்களுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மக்கள் இதுபோன்ற சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் வானிலையாளர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.