‘பணம் பெற்றுக்கொண்டு நுகர்வோருக்கு சிலிண்டர் டெலிவரி செய்யாத காஸ் ஏஜென்சி, 8,500 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த செக்குப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், நாமக்கல்லில், சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஏஜென்சியின் வாடிக்கையாளராக உள்ளார். இவர் கடந்த, 2019 டிச.,ல் காஸ் சிலிண்டர் பெறுவதற்காக, ஆன்லைனில் புக்கிங் செய்து, மாற்று சிலிண்டருக்காக, 715 ரூபாய் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்தி இரண்டு வாரம் கழித்தும் சிலிண்டர் வராததால், இணையதளத்தில் சென்று பார்த்துள்ளார். அதில், அவருக்கு ஏற்கனவே, காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து, காஸ் ஏஜென்சி மேலாளரிடம் கேட்டபோது, ‘விரைவில் காஸ் சிலிண்டர் வந்து விடும்; அதற்கான மானிய தொகையும் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்’ என, தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து, காஸ் ஏஜென்சியினர், அவர்களாகவே சீனிவாசன் பெயரில் மீண்டும் சிலிண்டருக்கு பதிவு செய்து, அதனை அவரது வீட்டுக்கு சென்று அவரது அம்மாவிடம், 715 ரூபாய் பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், 2020ல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், காஸ் ஏஜென்சி மீது வழக்கு தொடுத்தார்.
விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில், ‘செலுத்திய பணத்திற்கு, காஸ் சிலிண்டர் வழங்கவில்லை என, நிரூபிக்கப்பட்டுள்ளதால், காஸ் ஏஜென்சி வழக்கு தாக்கல் செய்தவருக்கு, சிலிண்டர் தொகை, 715 ரூபாய், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு, 7,500 ரூபாய், வழக்கு செலவு, 1,000 ரூபாய் என, மொத்தம், 9,215 ரூபாயை, நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டுள்ளனர்.