அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியுடன் 7 உயர் அதிகாரிகள் லஞ்ச பணத்தை பங்கிட்டு கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளரிடம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 லட்சம் லஞ்சமாக வாங்கிய போது, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவரிடம் போலீசார் கைதான அன்று நடத்திய விசாரணையில், அங்கித் திவாரியுடன் 7 அதிகாரிகள் சேர்ந்து, அவர் இதற்கு முன்பு பல வழக்குகளில் வாங்கிய லஞ்ச பணத்தை, பங்கிட்டு கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ”மத்திய பிரதேசத்தை சேர்ந்த அங்கித் திவாரி, 2018ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள துணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி (இன்ஸ்பெக்டர்) அந்தஸ்தில் பணிபுரிந்துள்ளார்.

எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய அவர், சில உயரதிகாரிகளின் தூண்டுதல் பேரில் அவர்கள், லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்துள்ளார். அங்கித் திவாரியுடன் சேர்ந்து 7 அதிகாரிகள் பெரும் தொகையை வைத்து, வழக்கில் சிக்குபவர்களிடம் பேரம் பேசுவதையும், அதில் கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.

அந்த அதிகாரிகளின் பெயர், விவரங்களை பெற அங்கித் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அவரிடம் இருந்து தகவல்களை பெற்ற பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்நிலையில், திண்டுக்கல் ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவியல் முதன்மை நீதித்துறை நடுவர் மோகனாவிடம் ஜாமீன் வழங்க கோரி அங்கித் திவாரி சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.