காக்காபாளையம்:தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து இறுதி போட்டியில் விளையாடிய இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடம் பிடித்தது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பூப்பந்து போட்டியில் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மாதிரி பள்ளியை எதிர்த்து விளையாடி இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.