திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் ஏலகிரி மலை அருகே உள்ள அத்தனாவூர் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பட்டா நிலத்தில் பயிர் செய்து வருகிறார். அவருடைய நிலத்தில் சிலர் அத்து மீறி நுழைந்து பயிரையும், நிலத்தை சுற்றி போடப்பட்டு இருந்த பாதுகாப்பு வேலியையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே 3வது நபர் ஒருவர் திருப்பத்தூர் தாசில்தாரை அணுகி, குமரேசனின் தனிப்பட்டாவில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டுமென விண்ணப்பம் அளித்து, பணத்தை லஞ்சமாக கொடுத்து, கூட்டு பட்டாவாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குமேரசன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தாசில்தார் விசாரணையின் போது, பட்டா பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறி, ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆகஸ்டு மாதம் அளித்த அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் குறித்து மனுதாரருக்கும், தாசில்தாருக்கும் நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என திருப்பத்தூர் கலெக்டருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.