
சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த 300 சபைகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட சபைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றரை லட்சம் சபை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கென இருக்கும் சிறு அளவிலான கல்லறைகள் நிரம்பி வழிவதால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒரே குழியைத் தோண்டும் அவலநிலை நீடித்து வருகிறது.
குடும்பக் கல்லறைகள் போல கட்டிக் கொள்ளவும் இடமில்லாத நிலை நிலவி வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லறை நிலம் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்த பின்னரும் இடம் கிடைப்பதில் மெத்தனமும், தாமதமும் நிலவி வருகிறது.
இறந்த பின்னர் கூட அந்த உடலை புதைப்பதற்கு நிம்மதியற்ற சூழல்தான் தற்போது நிலவி வருகிறது எனத் தெரிவித்தனர்.
கல்லறைக்கான இடத்தை தாமதமின்றி ஒதுக்க வேண்டும். அரசு அதிகாரிகளுடன் உடனடி சந்திப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேட்டி : பாஸ்டர் டி.சாம்ஜெயபால், தலைவர்,
பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு
தீர்மானம் 1
கல்லறைக்கான இடத்தை தாமதமின்றி ஒதுக்கக் கோரிக்கை.
பல்லாவரம் வட்டாரத்தில் கிறிஸ்தவ மக்களுக்கான பொது கல்லறை தோட்டம் இல்லாததால் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் பலவித இன்னல்களையும் சிரமங்களையும் அனுபவித்து வருகிறோம்.
இந்நிலையில் தமிழ் நாடு அரசு எவ்வித தாமதமின்றி எமது நியாயமான கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உடனே கிறிஸ்தவ பொது கல்லறை தோட்டத்தை எமது வட்டாரத்தில் அமைத்துக் கொடுத்திட இப்பொதுக்கூட்டத்தின் மூலம் கோரிக்கை விடுக்கிறோம்.
தீர்மானம் 2
கல்லறைக்கான இடத்தின் அவசரத்தேவையை கருத்தில் கொண்டு மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் எமது பல்லாவரம் கிறிஸ்தவ பொது கல்லறை கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவினை எட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
தீர்மானம் 3
பல்லாவரம் வட்டாரத்தில் கிறிஸ்தவ மக்களுக்கான பொது கல்லறை தோட்டத்திற்கான அத்தியாவசியத்தை உணர்ந்து அரசு உடனே ஆவன செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஊடக விளக்க அறவழி இயக்கம் தெருமுனை தொடர் பிரச்சாரம் போன்ற சட்டப்பூர்வ கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4
பல்லாவரம் வட்டாரத்தில் உள்ள அனைத்துப்பிரிவு கிறிஸ்தவ திருச்சபைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்டு பெரிய அளவில் அரசின் கவனத்தை ஈர்க்கும் செயல்களை முன்னெடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5
கிறிஸ்தவ மக்களின் இந்த இன்றியமையாத தேவையை கருத்தில் கொண்டு துணை நிற்க முன்வரும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த அன்பர்களுக்கு எமது பல்லாவரம் கிறிஸ்தவ பொது கல்லறை கூட்டமைப்பு நன்றி கூறுகிறது.
தீர்மானம் 6
எமது நியாயமான கோரிக்கையை ஏற்று எம்முடன் இணைந்து நின்று இதனைப் பெற்றுத்தர முனைந்து நிற்கும் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.
நன்றி.