
சென்னை, பல்லாவரம் அருகே சாலையோரம் குப்பை கொட்ட வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்வேசபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடம் உள்ளது.
இன்று காலை, நாகல்கேணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து குப்பை கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பழுதடைந்து சாலையோரம் நின்றது. அப்போது, அங்கிருந்த குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு லாரியில் உள்ள குப்பைகளிலும் பற்றிக் கொண்டதால், லாரி தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக லாரி ஓட்டுநர் ஜான் பாஷா (வயது 33) சம்பவத்தை தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். எனினும், அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.