
இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கிய 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்றுடன் நிறைவடைகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்ப விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக நேற்று மதியம் பம்பையை அடைந்த இந்த தங்க அங்கி பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட தங்க அங்கிக்கு சரங்குத்தியில் தேவசம் போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இன்று மதியம் 12க்கும் 12.30க்கும் இடையே தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். இன்றுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடைகிறது. 3 நாள் இடைவேளைக்குப் பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.நேற்று 55 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று முன்தினம் வந்தவர்கள் தங்க அங்கியுடன் நடைபெறும் தீபாரதனையை பார்ப்பதற்காக சபரிமலையிலேயே தங்கியிருந்தனர்.
இதனால் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஒலிபெருக்கிகளில் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது. இன்று 65 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கடந்த ஒரு வாரமாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கடந்த 23,24 தேதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுவரை கடந்த 41 நாளில் தரிசனம் செய்தவர்கள் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. இது கடந்த வருடம் வந்த பக்தர்களை விட 5 லட்சத்திற்கும் அதிகமாகும்.