நாமக்கல் மாவட்டம், முசறி அடுத்த கண்டிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் கோகுல்ராஜ் (26). புதுக்கோட்டை மாவட்டம், காத்தான்விடுதி கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (26). இவா்கள் இருவரும் தண்டலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கோகுல்ராஜ் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் காா் தொழிற்சாலையிலும், முருகானந்தம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையிலும் பணியாற்றி வந்துள்ளனா்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு காஞ்சிபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்னை – பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னா் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கோகுல்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானாா். காயம் அடைந்த முருகானந்தம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.