பிரதமர் கடந்த வாரம் மதுரை வந்திருந்தபோது, தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரின் சிறப்பு அழைப்பின் அடிப்படையில் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெள்ள சேதத்தை பார்வையிட வராதவர், பேரிடர் நிவாரணம் வழங்காதவர், தேர்தலுக்காக தமிழகம் வருகிறார் என்று பிரதமரின் தொடர்ச்சியான தமிழக வருகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பிரதமர் அழைத்து பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கடந்த 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அதன் பின்பு மதுரையில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது தமிழக அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வீரபாஞ்சான் டிவிஎஸ் பள்ளி ஹெலிபேடில் பிரதமரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

மாநில அரசின் திருத்தப்பட்ட புரோட்டோக்கால் அடிப்படிடையில் இரவு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பிரதமரை பார்த்துவிட்டு சென்றார். மறுநாள் காலை பிரதமரை தூத்துக்குடிக்கு வழியனுப்பும் பணி மட்டும் அமைச்சருக்கு இருந்த நிலையில், அன்று இரவே பிரதமரை சந்திக்க டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து சிறப்பு அழைப்பு ரகசியமாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த அடிப்படையில் மதுரை பசுமலை ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமரை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்ததாகவும். 10 முதல் 15 நிமிடங்கள் இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது. அதுபோல் பிரதமர் தூத்துக்குடி சென்றபோது அந்த கான்வாயில் பி.டி.ஆரின் கார் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

புரோட்டோக்காலை கடந்து தலைமைக்கு தெரியாமல் பிரதமரை சந்தித்துள்ளார் என்று பி.டி.ஆருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கினர்.

அது மட்டுமின்றி தான் சந்திக்கும், தன்னை சந்திக்கும் எந்தவொரு பிரமுகர் குறித்தும் தன்னுடைய சமூக ஊடகத் தளத்தில் பதிவிடும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமருடனான இந்த சந்திப்பை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன், “பிரதமர் ஒரு மாநிலத்தில் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்குள்ள மாநில அரசாங்கம் சார்பிலோ, மாநகராட்சி நிர்வாகம் சார்பிலோ புரோட்டோக்கால் அடிப்படையில் ஜனநாயக அடிப்படையில் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் பிரதமருக்கு வரவேற்பதற்கும் மரியாதை செய்யவும், அவருடன் கான்வாயில் உடன் பயணம் செய்வதற்கும் மாநில அரசாங்கத்துக்கு பொறுப்பு உண்டு. அந்த அடிப்படையில் அந்த பணியை செய்வதற்கு எங்கள் முதலைமைச்சரின் அலுவலகத்திருந்து எனக்கு உத்தரவு வந்தது. அதை நிறைவேற்றினேன். இது அரசாங்கத்தினுடைய பணி, தனி நபரின் விருப்பமோ, அரசியலோ கிடையாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.