உளவு துறை சீக்ரெட் ரிப்போர்ட்

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பான உளவு துறை ரிப்போர்ட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் டிச. மாதம் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சுமார் ஓராண்டு வரை நீண்டது. அதன் பின்னரே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது

இதற்கிடையே இப்போது விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர.

உளவு துறை: இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு உளவு துறை சமர்பித்த ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றுள்ள நிலையில், அனைத்து நுழைவாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய நுழைவாயில்களை தவிர்த்துவிட்டு தொலைவில் மற்றும் சாலை வசதிகள் முறையாக இல்லாத என்டரி பாயிண்ட்களை பயன்படுத்தி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியை ஆரம்பித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இதில் கலந்து கொண்டு டெல்லியை முற்றுகையிட உள்ளனர்.

முன்னதாக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முன்பு விவசாய சங்கத்தினர் கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில விவசாயிகளிடம் நேரடியாக ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது

6 மாதங்களுக்கு தேவையான உணவு: இந்தப் போராட்டம் தொடர்பாக உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டில் தான் இந்த முக்கிய தகவல்கள் கூறப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட பொருட்கள் உடன் தான் அவர்கள் இந்த பேரணியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்றிரவு விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி டெல்லி சலோ போராட்டத்தை இன்று விவாசியகள் தொடங்கியுள்ளனர். ஷம்பு பார்டர் (அம்பாலா), கானோரி (ஜிந்த்), மற்றும் டப்வாலி (சிர்சா) இடங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

பகீர் பிளான்: இந்த டிராக்டர்களை விவசாயிகள் தங்குமிடங்கள் போல மாற்றி உள்ளதாகவும் உளவு துறை ரிப்போர்ட் கூறுகிறது. மேலும், விவசாயிகள் சிறு குழுக்களாக டெல்லிக்குள் வந்து நகரில் இருக்கும் குருத்வாராக்கள், தர்மசாலாக்கள், ஆசிரமங்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கவும் பிறகு திடீர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உளவு துறை ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் இல்லம், உள்துறை அமைச்சர் அலுவலகம் போன்ற இடங்களில் போராட்டம் நடக்கலாம் என்பதால் அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது