திருப்பத்தூர்: வேறு ஒருவருக்கு விற்ற 21 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மின்வாரிய பெண் அதிகாரி மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசெல்வராஜ் (60). இவரது மனைவி மனகாந்தி (50). இவர் பேராம்பட்டு மின்வாரிய மேற்பார்வை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை துரைசெல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாபன், சக்திவேல், சரவணன், ஏழுமலை, டாக்டர் சிவக்குமார் ஆகியோருக்கு தனித்தனியாக பிரித்து விற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8-9-2021ம் ஆண்டு துரைசெல்வராஜ் மற்றும் அவரது மனைவி மனகாந்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களது மகள் அன்புச்செல்விக்கு போலி ஆவணம் மூலம் ஏற்கனவே தாங்கள் விற்ற 21 ஏக்கர் நிலத்தை செட்டில்மென்ட் செய்ததாக தெரிகிறது. இதற்காக போலி பட்டா, பத்திரம், வில்லங்க சான்று ஆகியவற்றை தயாரித்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட்ஜானிடம் சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பத்மநாபன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே விற்ற சொத்துக்களை துரைசெல்வராஜ், அவரது மனைவி மனகாந்தி ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் மகள் அன்புச்செல்விக்கு போலி ஆவணங்கள் மூலம் தானசெட்டில்மென்ட் செய்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தம்பதி இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே போலியான ஆவணங்களை சரிவர பார்க்காமல் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் சேகர், பத்திரப்பதிவு செய்ய அறிவுறுத்திய மாவட்ட பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது கைதான துரைசெல்வராஜ், ஏற்கனவே சொத்து பிரச்னை காரணமாக தனது தந்தையை கொன்ற வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.