சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி குழுவினர்

கருதடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி நாய் பிடி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதைதொடா்ந்து சாலையில் செல்பவா்களை நாய்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைத்து தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தியும் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் சில தினங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை சில நாய்கள் துரத்துவதால் பயணிகள் அச்சம் அடைந்து ஓடுவதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதையடுத்து இந்த புகார்கள் குறித்து விமான நிலைய அலுவலர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி குழுவினர் விமான நிலைய வளாகத்தில் சுற்றி திரிந்த 10 இருக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து அதற்கு தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத தெரு நாய்களை கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் நாய் பிடி வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்படி அழைத்துச் செல்லப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்த பின்னர் எங்கிருந்து பிடித்து சென்றார்களோ அங்கேயே மீண்டும் தெரு நாய்களை விட்டு விடுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

ஆனால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசிகள் செலுத்திய பின்பு மீண்டும் விமான நிலைய வளாகத்தில் நாய்களை விட்டால் மீண்டும் பயணிகள் நாய்களை பார்த்து அச்சப்படுவார்கள் என்பதால் தெரு நாய்களை வேறு இடத்திற்க்கு கொண்டு சென்று விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.