
பல்லாவரம் அருகே சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியானர், மற்றொருவர் படுகாயம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்( 25). இவர் பல்லாவரம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை முத்துவேல் தனது நண்பரான தேவா (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை ஜி.எஸ்.டி சாலை இணைக்கும் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது திடீரென மோதியதில் முத்துவேல் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
மேலும் தேவா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த தேவாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் தங்கப்பாண்டி( 30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.