ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, மாரியப்பன், துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ சுமதி உள்ளிட்டோர் பாரிஸ் சென்றுள்ளனர்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

டிடிகே நகரில் அமைந்துள்ள ஸ்காட் மைதானத்தில் இருந்து முடிச்சூர் வரையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு இம்மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

18 வயது முதல் 35 வயதுக்குட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல் 10 வயதுக்குட்ட சிறார்கள், 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் வரையில் பல்வேறு பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனியே மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இப்போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல் உறுப்பினர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல தலைவர் திரு.டி.காமராஜ், 53வது வார்டு உறுப்பினர் திரு.டி.ஆர்.கோபி, ஸ்காட் தலைவர் திரு.டி.ஜி.ஆர்.பாபு உள்ளிட்டோர் நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்களைகள் கலந்துகொண்டனர். அதிகாலை 4 மணிக்கு துவங்கி இப்போட்டி, சுமார் 7 மணி வரை நடைபெற்றது. போட்டியில் கலந்துகொண்டவர்களிடம் இருந்து பங்கேற்பு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பதும், கலந்துகொண்ட அனைவருக்கும் டிசர்ட், சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.