தாம்பரம் அருகே தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பலி குழந்தை இறந்த சோகத்தில் தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் , சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா.
இவரது மகள் அஸ்வினி (32).
இவர் சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) என்ற மகன், ஹார்த்ரா (4) என்ற மகள் இருந்தனர்.

இந்நிலையில் மகன் ஹிரிதிவ் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்ததாகவும், இதனால் அஸ்வினி மன உளைச்சலில் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வந்ததால் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தூக்க மாத்திரைகளை அவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு அஸ்வினி தூக்க மாத்திரைகளை அவரது படுகையின் அருகில் வைத்துவிட்டு கழிவறைக்கு சென்று விட்டு வந்த நிலையில் அவரது மகள் ஹார்த்ரா தூக்க மாத்திரையை தவறுதலாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் தூங்க சென்ற நிலையில் அதிகாலை சு அஸ்வினி எழுந்து பார்த்த போது குழந்தை ஹார்த்ரா வாயில் நுரை வந்து குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் மகள் இறந்துவிட்டதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு அஸ்வினி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு பின்னர் கழிவறைக்கு சென்று பிளேடால் அவரது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் காலை எப்போதும் போல குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதற்காக குழந்தையின் பாட்டை சுதா வந்து பார்த்தபோது குழந்தையின் வாயில்
நுரை வந்தபடி குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் கழிவறையில் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி கையை அறுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.

தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அஸ்வினியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அஸ்வினி சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தை தவறுதலாக தூக்க மாத்திரையை சாப்பிட்டதில் சந்தேகம் இருப்பதால் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.