உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் போது சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே நவ. 12ல் மலையில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதனால் மறுமுனையில் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கை 11 நாட்களாக நடந்து வருகிறது. இவர்களை மீட்கும் பணிக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த ‘தரணி ஜியோ டெக்’ நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. இவர்களிடம் ‘சிமென்ட்ரி சிஸ்டம்’ முறையில் துளையிடும் அதிநவீன ரிக் வண்டி இருந்தது.

இதன் வாயிலாக தொழிலாளர்கள் சிக்கிய இடத்துக்கு மேல் இருந்து துளையிட்டனர். மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக துளையிடப்பட்டது.

அதன் வாயிலாக ‘எண்டோஸ்கோபி’ கேமராவை உள்ளே அனுப்பி தொழிலாளர்களை அவர்களின் குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டது. மேலும் 41 தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து பொருட்களை இதன் வழியாகவே அனுப்பினர்.

‘தரணி ஜியோ டெக்’ நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெயவேல் கூறியதாவது:

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்டுத்தரக்கோரி எங்கள் நிறுவனத்திற்கு அழைப்பு வந்தது. அப்போது எங்களிடம் மூன்று துளையிடும் இயந்திரங்கள் இருந்தன.
அதில் நவீன ரிக் இயந்திரமான ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ வாயிலாக துளையிடும் பணியில் ஈடுபட்டு சாதித்து காட்டினோம். இந்த இயந்திரத்தை உருவாக்கிய பி.ஆர்.டி. நிறுவனத்துக்கு நன்றி” என்றார்.

பி.ஆர்.டி. நிறுவன மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் கூறுகையில் ”திருச்செங்கோட்டில் 1972ல் பரந்தாமன் ராக் டிரில்லர் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினோம்.

”எங்கள் நிறுவனத்தில் இருந்து ‘பி.ஆர்.டி. – ஜிடி 5’ ரிக் இயந்திரத்தை தயாரித்து கொடுத்தோம். இது தற்போது 41 தொழிலாளர்களை காப்பாற்றியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.