சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்., ஆட்சியை தக்க வைக்கும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதனையே கூறின. ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து பா.ஜ., முன்னாள் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறியதாவது:
பிரதமர் மோடியின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் முடிவு இப்படிதான் இருக்கும் என நாங்கள் அறிவோம். ஆனால், மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. பூபேஷ் பாகெலை மக்கள் நிராகரித்து விட்டனர், பூபேஷ் பாகெலின் ஊழல், மதுபான முறைகேடு, மகாதேவ் சூதாட்ட மோசடி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். நான் எதனையும் கேட்கவில்லை. கட்சி மேலிடம் அளிக்கும் எந்த பணியையும் முழு அர்ப்பணிப்போடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.