
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53). பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் தனது மகன் போல் பாவித்து வீட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்துள்ளார். விஜயகாந்தின் அக்காவின் திருமணத்தையும் பாஸ்கர் மனைவி சங்கரி முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25-ந் தேதி வெளியே சென்று வீட்டினுள் நுழைந்த பாஸ்கர் மனைவி சங்கரி அறையினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த நகை பெட்டியில் வைத்தி ருந்த 27.5 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாஸ்கர் மனைவி சங்கரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விஜயகாந்த் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.