சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று புதியதாய் திறக்கப்பட உள்ளது,அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்.அதன் அலுவலகத்தில் புதிய ஏசி இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது.

அதனை கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சையத் சபீர்(வயது-22), முகிர்தீன்(வயது -24) மற்றும் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சபிருல்லா(வயது-25) ஆகிய மூன்று பேர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அறையின் உள்ள புதிய ஏசியை பொறுத்தி விட்டு,அந்த ஏசி-க்கான இணைப்பு கம்ப்ரசர்களை அலுவலகத்திற்கு வெளிப்புறம் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஏசி கம்ப்ரசர் இயந்திரம் திடீரென வெடித்துச் சிதறியது இதில் அந்த இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக தீப்பொறி பெட்ரோல் டேங்கின் மீது படாததால் பெரும் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது. சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் பயங்கர சத்தத்துடன் ஏசி இயந்திரம் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.