தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 10.12.2023 தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1: தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் வீசியதால் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால், இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்புகளை சரி செய்யவும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூபாய் 5,060 கோடி உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டிசம்பர்- 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங் அவர்கள் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஒன்றிய அரசின் சார்பில் பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் நகர்ப்புற வெள்ளத் தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிதியாக 5000 கோடி ரூபாய் உடனே விடுவிக்குமாறு மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: பருத்தி, நூல் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கங்கள், இறக்குமதி வரி விதிப்பு, மின்சார கட்டணம் போன்றவற்றால் ஜவுளித் தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

சீனா, வங்கதேசம், வியத்நாம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து துணி, ஆடைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றின் இறக்குமதி அசாதாரணமான அளவில் அதிகரித்துள்ளது. அதேநேரம் உள்ளூர் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான நீண்ட இழை பருத்தியை இறக்குமதி செய்வதற்கு 11 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்னிந்திய பஞ்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பது அண்மையில் அனைத்து நூற்பாலை சங்கங்கள், ஓபன் எண்டு நூற்பாலைகளின் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு ஆலைகளை மூடலாம் எனவும், உற்பத்தியை 35 சதவீதம் குறைக்கலாம் எனவும் பஞ்சாலை சங்கத்தினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதனால் உற்பத்தி பாதிப்பும்,தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகும் நிலையும் உருவாகும்.

ஒன்றிய அரசு, முதன்மைக் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது, கரோனா கால மூன்றாண்டு கடனை 6 ஆண்டு கடனாக மறுசீரமைப்பது, மேலும் கடன் வழங்குவது, 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவது, தரக்கட்டுப்பாட்டு உத்தரவு சிக்கல்களைக் களைவது போன்றவற்றில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று பஞ்சாலைகள் வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய அரசும்,மாநில அரசும் கவனத்தில் கொண்டு ஜவுளித் தொழில் நெருக்கடிகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3: தமிழ்நாட்டின் சிறு ,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உயர்த்தப்பட்ட 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், பீக் அவர் கட்டணம் ரத்துசெய்தல், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பல்முனை ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்தல் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மின்வாரியம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ1 என்ற பழைய அட்டவணைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஒருயூனிட்டுக்கு ரூ.7.65 ஆக வசூலிக்கப்பட்ட மின்கட்டணம் ரூ.4.60 ஆக குறையும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு மற்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில்,டிசம்பர் 6 ஆம் தேதி மீன்பிடித் தொழிலுக்குச் சென்றிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்கள் என 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
கைது செய்த தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடை பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி வந்து தாக்குவதும் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதும்,படகுகளை பறிமுதல் செய்வதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வது மீனவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது.நாடாளுமன்றத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி உரையாற்றும் போது தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்திய அரசு இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன் ,இது வரை இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள 133 படகுகளை மீட்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: கிராஃபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு, ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராஃபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

கிராஃபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட கனிம வளங்கள் கண்டறியப்பட்டு உள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதன்மூலம் பாதிப்படையும்.

கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும். கிராஃபைட் கனிமம் எடுப்பதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.

கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. மனிதர்களையும், சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இவ்வகையான திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தென்தமிழ்நாட்டில், விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமலும், மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமலும் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்6: அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்கள். இந்த ஆண்டு மழையின் அளவு குறைந்ததாலும், இயற்கையின் சீற்றத்தாலும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதல் அதிகமாகி விவசாயிகளுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தாலும், அமெரிக்கன் படைப்புழு விவசாயிகள் அடித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாமல் முழுவதுமாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே தமிழ்நாடு அரசு இதனை பேரிடர் பாதிப்பாக கருத்தில் கொண்டு மேற்கண்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் 7: செப்டம்பர் 15 அன்று மதுரையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா திறந்தவெளி மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்திய மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் அவர்களுக்கு கழக நிர்வாக குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மதுரை மாநாடு வெற்றிக்கு எல்லா வகையிலும் துணை நின்ற மதுரை மண்டல மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவரையும் இக்கூட்டம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.

தீர்மானம் 8: கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து, மறுமலர்ச்சி திமுக சார்பில் தமிழ்நாட்டு மக்களிடம் ஐம்பது இலட்சம் கையெழுத்துகளைப் பெற்று குடியரசு தலைவரிடம் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.

ஆளுநருக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் கழக நிர்வாகக் குழு பாராட்டுக்களை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 9: தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், வன்கொடுமைகளின் எண்ணிக்கை 1761 என தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி )அறிக்கை தெரிவிக்கிறது.

இது 2020 இல் 1274 ஆகவும்; 2021 ஆம் ஆண்டில் 1377 ஆகவும் இருந்தது.
2022 ஆம் ஆண்டில் 56 பட்டியல் இன சமூகத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 168 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்ளனர்.

இந்திய அளவில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 57582 ஆக இருந்தது. இது 2020 ஆம் ஆண்டில் 50291 ஆகவும்; 2021 ஆம் ஆண்டில் 50900 ஆகவும் இருந்தது. எஸ்சி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2022 இல் 14 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே எஸ்சி மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகம் நிகழும் முதல் மூன்று மாநிலங்கள் உத்தரப்பிரதேசம் (15368) ராஜஸ்தான் (8752) மத்தியபிரதேசம் ( 7733) ஆகும்.

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்கள் மீதான வன்கொடுமைகளைக் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10: தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டே காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது.

ஒன்றிய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய, ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP)

அடிப்படையில், மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலம் (OALP) மூலம் ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி (ONGC) நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோமீட்டர் பகுதியில் (இதில் தரைபகுதி – 1259.44 மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் 143.97 ச.கிமீ.) ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது.

தற்போது அந்தப் பகுதியில் 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி அவசியமில்லை.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது விண்ணப்பித்துள்ளது.

மேலும் அரியலூர் மாவட்டத்திலும் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி உள்ளது.

ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதுடன், இராமநாதபுரம் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொள்ள முயற்சிப்பதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8