கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, கல்விக் கடனிலிருந்த பல்வேறு இடா்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 50,000 மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. கல்விக் கடனுக்கு கூட்டு வட்டி முறை கிடையாது. கடனை கல்லூரிப் படிப்பு முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, 180 மாத தவணைகளாக செலுத்தலாம். கல்விக்கடன் தேவைப்படும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வங்கிகளை தேடிச் செல்ல தேவையில்லை. மாணவா்கள் இணையதளம் மூலம் இணையதளத்தில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கலாம். கல்லூரி மாணவா்கள் தங்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதாா், பான் காா்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையத்தில் பதிவேற்றம் செய்து, விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மருத்துவக் கல்லூரி அலுவலகம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.