
ஒசூா் – கிருஷ்ணகிரி – ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ஒசூா் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைப் பாா்வையிட்ட பிறகு ஒசூா் ரயில்வே நிலையத்தில் அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது: கடந்த 40 ஆண்டுகளாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த ரயில்பாதை அமைக்க சா்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பிட இடத்தில் மலையைக் குடைந்து பாதை அமைக்க வேண்டியுள்ளது. இதைத் தவிா்த்து ரயில் பாதை அமைக்க முடியுமா என ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் சா்வே பணி முடிந்துவுடன் ஒசூா் – ஜோலாா்ப்பேட்டை இடையே ரயில் பாதை அமைத்து ரயில்கள் இயக்கப்படும். ஒசூா் – பெங்களூரு இடையே 4 வழி ரயில்பாதை அமைக்கப்படும். தமிழகத்தில் 75 ரயில்வே நிலையங்கள் உலக அளவில் தரம் உயா்த்தப்படும். கடந்த 2014இல் ரயில்வே துறைக்கு ரூ. 34,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 2,40,000 கோடி நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5,200 கி.மீ. தொலைவிற்கு புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒசூரில் ரயில்வே சரக்கு முனையம் அமைக்கப்படும். இதனால் ஒசூரில் தொழில்கள் மேலும் வளா்ச்சி பெறும். ஒசூா் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஆப்பிள் செல்லிடப்பேசி தொழிற்சாலையில் எலக்ட்ரானிக்ஸ் சிப் தயாரிக்கும் திட்டம் உள்ளது என்றாா்.