ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியமாகும். முன்னைய காலத்தில் நடத்தல், சைக்கிள் ஓடுதல், ஓடுதல், விளையாடுதல், உடம்பை வளைத்து அன்றாட வேலைகளைச் செய்தல் போன்றவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் உடற்பயிற்சிகளாக அமைந்தன. ஆனால், தற்போதைய காலத்தில் நவீன சாதனங்களின் வருகையால்;, இவ்வாறான உடற்பயிற்சிகள் இல்லாமல் போய்விட்டன. காணப்பட்டன. இந்நிலையில், உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே உடற்பயிற்சி நிலையங்களும் பல்கிப் பெருகியுள்ளன. ஆகையால், உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வோர் தத்தமது தேக ஆரோக்கியத்துக்கேற்ப எவ்வகையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது.முதலில் உடற்பயிற்சி பற்றிய அறிவு இருப்பது அவசியமென்பதுடன், உடற்பயிற்சி நிலையங்களில் உடற்பயிற்சி பற்றிய அறிவூட்ட, வழிநடத்த தகுதியுடைய பயிற்றுவிப்பாளர் இருக்கின்றாரா என்பதையும் கவனிக்க வேண்டும். எவ்வகையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும், எவ்வகையான உடற்பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும், உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள், எவ்வளவு நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் போன்ற அறிவு இருக்க வேண்டியது அவசியமாகும்.மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபடுதல் ஆரோக்கியமானது அல்லவென்பதுடன், நவீன உடற்பயிற்சி நிலையங்களில் பல தரப்பட்ட உபகரணங்கள் இருப்பதால், முழுவதையும் நாம் பயன்படுத்த வேண்டுமென்றில்லை. எலும்புகள் மற்றும் தசைப்பகுதிகளை வலிமையடையச் செய்வதே உடற்பயிற்சி செய்வதன் முக்கிய நோக்கமாகும். ஆனால், தற்போதைய நவீன உடற்பயிற்சி நிலையங்களில் எண்ணற்ற உபகரணங்கள் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய அறையில் வியர்வை வெளியேறாமல், வலி இல்லாமல் உடற்பயிற்சி செய்வதால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. அதேபோல் சுத்தமான காற்று, சூரியஒளி இல்லாத அறையில் உடற்பயிற்சி செய்தல் தவறானது. இதனால், எலும்பின் வலிமைக்குப் போதுமான விட்டமின் டி கிடைக்காமல் போகும் சந்தர்ப்பமும் உண்டு.ஆகையால், மேற்கூறப்பட்ட விடயங்களைக் கவனத்திற்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது.