
தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி சென்றாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் ஒருசில இடங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கன மழை கொட்டியது. நேற்று இரவும் பலத்த மழைபெய்தது.
இந்நிலையில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பயணிகள் வருகை குறைந்ததால் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.