சென்னை: குடியிருப்பு திட்டங்களில், ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, வேறு திட்டங்களுக்கு மாற்றும் முன்மொழிவுகளை அனுப்ப, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கான நிலத்தில், 10 சதவீத பகுதி திறந்தவெளி ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

இதன்படி, 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம்.

அந்த நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள், பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்நிலங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுகிறது.

இதுகுறித்து, அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பிறப்பித்து உள்ள உத்தரவு:

பொது பயன்பாட்டுக்கு என ஒதுக்கப்படும், ஓ.எஸ்.ஆர்., நிலங்களை, பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எந்த நோக்கத்துக்காக, இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பொது மக்களின் கோரிக்கை, மன்ற தீர்மானம் என்ற அடிப்படையில், இந்நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன.

இருப்பினும், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை மீண்டும் மீண்டும் அனுப்புகின்றன.

இது, தேவையில்லாத குழப்பங்களுக்கு வழி வகுப்பதாக உள்ளது. எனவே, நகராட்சிகள், மாநகராட்சிகள் இது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.