மகாளயம் என்றால் ஒன்றாக கூடுவது என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கே மகாளய அமாவாசை என்னும் சிறப்பு உள்ளது.மகாளய பட்ச நாட்களில் முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமியில் தோன்றி நம் இல்லத்தில் நம் அருகிலேயே இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது.
இந்துக்களுக்கு அவர்களின் குலதெய்வங்களும், பெருந்தெய்வங்களும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முன்னோர்களை வழிபடுவது, அவரவர்களின் சந்ததியினர்களின் மேன்மைக்கான வழியாகவும், செல்வம் கொழிக்கும் வளமையைக் கொடுக்க வல்லதாகவும் கருதப்படுகிறது.
காலம் சென்ற நம் முன்னோர்களை அனுதினமும் வழிப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பான நாள் உண்டல்லவா? அது தான் மகாளய பட்சம்.
பொதுவாக அமாவாசைக்கு நாம் ஆற்றிலும், கடலிலும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனால் நம் முன்னோர்களுக்கு அளிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஆனால் சிறப்புமிக்க மகாளய பட்ச நாட்களில் முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமியில் தோன்றி நம் இல்லத்தில் நம் அருகிலேயே இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது.